×

3,000 ஊழியர்கள் வேலையை காலி செய்ததை நியாயப்படுத்தும் மஸ்க் டிவிட்டரில் தினமும் ரூ.30 கோடி நஷ்டம்: பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

நியூயார்க்: ‘தினமும் ரூ.30 கோடி நஷ்டமாகிக் கொண்டிருக்கும் போது, ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேற வழியே இல்லை’ என டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது நடவடிக்கை நியாயப்படுத்தி உள்ளார். டிவிட்டர் சமூக ஊடகத்தை உலகின் நம்பர்-1 எலான் மஸ்க் சமீபத்தில் ரூ.3.62 லட்சம் கோடி விலை கொடுத்து வாங்கினார். டிவிட்டரை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்த மாட்டேன் என முதலில் கூறிய அவர் அடுத்த சில தினங்களிலேயே அதற்கு எதிர்மாறான நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக, உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளர்களில் 50 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளார். நேற்று முன்தினம் டிவிட்டர் ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு இமெயில் மூலம் பணிநீக்க உத்தரவு அனுப்பப்பட்டது. 3,738 பேரை ஒரே நாளில் டிவிட்டர் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

இது குறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை துரதிஷ்டவசமானது. ஆனால், வேறு வழியில்லை. தினமும் டிவிட்டரில் ரூ.30 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2ம் காலண்டில் நிறுவனம் ரூ.2000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுவே ஒரு ஆண்டிற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.550 கோடி லாபம் ஈட்டி உள்ளது. நஷ்டத்தால்தான் பணிநீக்கம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு இழப்பீடாக 3 மாத சம்பளம் வழங்கப்படும். இது சட்டப்படி தர வேண்டிய தொகையை விட 50 சதவீதம் அதிகம் என்பதால் பல ஊழியர்கள் சந்தோஷப்படுகின்றனர்’’ என்றார். இதற்கிடையே, அமெரிக்க தொழிலாளர் சட்டப்படி 50 சதவீத பணியாளர்களை ஒரு நிறுவனம் பணியில் இருந்து நிறுத்த வேண்டுமெனில் 2 மாதத்திற்கு முன்பாக நோட்டீஸ் தர வேண்டும். இதை மீறியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

* எவ்வளவு வேணா திட்டுங்க
‘ப்ளூ’ டிக் கணக்குகளுக்கு ரூ.660 மாத கட்டணம் நிர்ணயித்த உத்தரவை பலர் விமர்சித்து வரும் நிலையில், மஸ்க் நேற்றைய தனது டிவிட் பதிவில், ‘‘என்னை எவ்வளவு வேணா திட்டிக்குங்க. ஆனா அதுக்கு கட்டணம் ரூ.660’’ என கிண்டலடித்துள்ளார்.

* 200 இந்திய ஊழியர்களில் எத்தனை பேர் நீக்கம்?
இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் என்ற சரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஒட்டுமொத்தமாக காலி செய்யப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை டிவிட்டர் நிறுவனம் வழங்குமா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால் வேலை இழந்தவர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

* கடனை சமாளிக்கவே அதிரடி காட்டுகிறார்
டிவிட்டரை வாங்கும் போது மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் ரூ.1.2 லட்சம் கோடி பங்குகளை விற்றுள்ளார். மேலும், பல கோடிக்கு கடன் வாங்கி உள்ளார். கடனுக்கான வட்டியாகவே மாதந்தோறும் அவர் பல கோடிகளை கட்ட வேண்டும். அதனால்தான் செலவை குறைக்க ஊழியர்களை பாதியாக குறைத்துள்ளார். மேலும், சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கான ‘ப்ளூ’ டிக் பெற மாதத்திற்கு ரூ.660 கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளார். கடனை சமாளிக்கவே மஸ்க் நஷ்ட கணக்கை காரணமாக காட்டுவதாக கூறப்படுகிறது.

Tags : Musk ,Twitter , Musk justifies 3,000 employee layoffs as Twitter loses Rs 30 crore daily: Victims sue
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...